Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 நவம்பர் (ஹி.ச.)
முன்னாள் துணைப் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான எல்.கே. அத்வானியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
நாட்டின் பிரிவினையால் ஏற்பட்ட துயரங்களைச் சந்தித்தபோதும், தனது கொள்கையில் உறுதியாக இருந்து நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட்டவர் அத்வானி என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதின் நபின்,
நாட்டின் பிரிவினையால் ஏற்பட்ட துயரங்களை அனுபவித்தபோதும், தனது உறுதியான கொள்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்காமல், 'தேசமே முதன்மை' என்ற சிந்தனையை முன்னெடுத்தவர் அத்வானி. நாட்டின் வளர்ச்சிக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு இன்றளவும் நம் அனைவருக்கும் உத்வேகமாக உள்ளது.
முன்னதாக ஜனசங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய காலம் முதல் பாஜக தொடங்கப்பட்ட காலம் வரை அவர் வழங்கிய தலைமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக தொடங்கப்பட்டபோது நாடாளுமன்றத்தில் வெறும் இரண்டு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது. அப்போது இந்தக் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று பலரும் கருதினர்.
ஜனதா கட்சியின் காலகட்டத்திற்குப் பிறகு பாஜக உருவானபோதும், இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் கட்சியில் ஒருவித சோர்வு நிலவியது.
அந்தச் சூழலில், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகிய இருவரும் பாஜகவுக்கு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டனர். அவர்களின் விடாமுயற்சியே இன்று பாஜக இந்த அளவிற்குப் பெரிய கட்சியாக வளர்வதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
'அதே இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவோம்' என்ற முழக்கம் பாஜக மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் ஒருங்கிணைந்த உணர்வாக உருவானது.
அத்வானியின் ரத யாத்திரை பீகாரில் தடுத்து நிறுத்தப்பட்டபோது நான் மிகவும் இளையவனாக இருந்தேன். இருப்பினும், அப்போது ஒட்டுமொத்த நாடும் அந்தச் சம்பவத்தால் பரபரப்பானதை நினைவுகூர்கிறேன்.
சமஸ்திபூரில் யாத்திரையைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், கரசேவகர்கள் அத்வானியின் நோக்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்தனர்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அந்தப் பயணம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
அதன் விளைவாக இன்று அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் கோயில் கம்பீரமாக எழுந்து நிற்பதை நாடு காண்கிறது என்று நிதின் நபின் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V