Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 08 நவம்பர் (ஹி.ச.)
தீபாவளித் திருநாளில் முருகப்பெருமானைத் தரிசனம் செய்து வழிபடுவதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாகப் பழனிக்கு வருகை தந்தனர்.
இதனால் பழனி மலைக்கோயில் மற்றும் அடிவாரப் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
பக்தர்களின் வருகை அதிகரித்ததால் மலைக்கோயிலுக்குச் செல்லும் மின்இழுவை ரயில் (வின்ச்) நிலையம் மற்றும் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) நிலையங்களில் நீண்ட வரிசை ஏற்பட்டது. பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்குச் சென்றனர்.
மலைக்கோயிலில் கூட்ட நெரிசலைத் தவிர்த்து பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காகத் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி, குடமுழுக்கு நினைவு மண்டபம் வழியாக ஒருவழிப் பாதையில் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தரிசனம் முடித்த பக்தர்கள் படிப்பாதை வழியாக அடிவாரத்திற்குத் திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதேபோல், பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலான திருஆவினன்குடியிலும் தீபாவளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
மேலும், தீபாவளித் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் கோயில் வளாகத்தில் நெய் தீபம் மற்றும் அகல் விளக்குகளை ஏற்றி முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பழனி மலைக்கோயில் மற்றும் திருஆவினன்குடி கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதால், பழனி முழுவதும் ஆன்மிகக் கொண்டாட்டம் களைகட்டியது.
Hindusthan Samachar / LOGESHWARI V