Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 08 நவம்பர் (ஹி.ச.)
சிவகாசியில் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பட்டாசு உற்பத்திப் பணிகள் தொடங்கியபோது, மழை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக உற்பத்தி மந்தமாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து உற்பத்திப் பணிகள் வேகமெடுத்த நிலையில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தொடர் விபத்துகளைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக விதிமீறல்கள் தொடர்பாக சில தொழிற்சாலைகள் மீது இடைநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.
நடப்பாண்டில் சுமார் ரூ.8,000 கோடிக்கு பட்டாசு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சர்வதேசப் போர் பதற்றம் காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிற்சாலைகளில் ஆய்வுகள் மற்றும் உற்பத்தி சார்ந்த கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் எதிர்பார்த்த அளவிலான உற்பத்தியை எட்ட முடியவில்லை.
இதனால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு சுமார் ரூ.7,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டன.
இருப்பினும், தமிழகத்தின் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு பல்வேறு மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நடப்பாண்டு பட்டாசு விற்பனை சுமார் ரூ.7,000 கோடியை எட்டியுள்ளது.
இதற்கிடையே, கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சரவெடிப் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக இருந்து வந்த தடைகளுக்குப் பிறகு, தற்போது நிபந்தனைகளுடன் தயாரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், தீபாவளிப் பண்டிகை நிறைவடைந்ததும் மீண்டும் பட்டாசு உற்பத்திப் பணிகளைத் தொடங்க உற்பத்தியாளர்கள் தயாராகி வருகின்றனர்.
சரவெடித் தயாரிப்புக்கான அனுமதி மற்றும் சந்தை வரவேற்பு காரணமாக 2027ஆம் ஆண்டில் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் இருப்பதாகவும்,அடுத்த ஆண்டு இதை விட அதிக மடங்கு விற்பனை நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V