Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 08 நவம்பர் (ஹி.ச.)
அயோத்தி ஜெய் ஸ்ரீராம் கோவிலில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
ராம ஜென்மபூமி இயக்கத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்திய மறைந்த அசோக் சிங்காலுக்கும் எனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கும் வகையில், மதிப்பிற்குரிய துறவிகள் மற்றும் பக்தர்களுக்குத் தீபாவளிப் பரிசுகளை வழங்க உள்ளேன்.
நான் தற்போது இங்கிருந்து ராம ஜென்மபூமிக்குச் செல்ல உள்ளேன். அங்கு வழிபாடு செய்து இறைவனின் ஆசியைப் பெற்ற பிறகு, நிஷாத் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குச் செல்ல உள்ளேன். அங்கு நிஷாத் ராஜாவின் நினைவுகளைப் போற்றும் வகையில் பிரசாதம் வழங்கி, தீபாவளிப் பரிசுகளையும் வழங்கி கௌரவிக்க உள்ளேன். இதனைத் தொடர்ந்து, தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குச் செல்ல உள்ளேன். அங்கு மாதா சபரிக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், இந்த ஒட்டுமொத்த இயக்கமும் முன்னோக்கிச் செல்லத் தங்களது ஆசியை வழங்கிய மதிப்பிற்குரிய துறவிகள் மற்றும் சாதுக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வழிகாட்டுதல் இந்த இயக்கத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தது.
இதனைத் தொடர்ந்து, கோரக்பூரில் உள்ள வன்டாங்கியா கிராமத்தில் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டத்திலும் பங்கேற்க உள்ளேன்.
சனாதன தர்மத்தைப் பின்பற்றும் அனைவருக்கும், உத்தரப் பிரதேச மாநில மக்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் அயோத்தியில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிடுவதற்குக் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. பகவான் ஸ்ரீராமரின் பக்தர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. புனிதப் பரிக்ரமா நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது பகவான் ஸ்ரீராமரின் பக்தர்கள் அயோத்திக்கு வரவேற்கப்படுகின்றனர் என்று பெருமையுடன் கூற முடிகிறது. தீபோத்சவக் கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடினர்.
யாருக்கும் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. யாரிடமும் பாகுபாடு காட்டப்படவில்லை. இதுவே ஒரு பண்டிகையின் உண்மையான மகிழ்ச்சியாகும்.
தற்போது பரிக்ரமா நிகழ்ச்சியை யாரும் தடுப்பதில்லை. மாறாக, அதற்கு ஊக்கமளித்து ஆதரவு அளிக்கப்படுகிறது. இன்று அரசின் நலத்திட்டங்கள் மூலம் ஒவ்வொரு தனிநபரும் பயனடைந்து வருகின்றனர். ஆன்மிக நம்பிக்கையும் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றிணைந்துள்ள இந்தச் சிறப்பான சூழல், புதிய உத்வேகத்தை அளிக்கிறது.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் தெரிவித்ததாவது,
இன்று தீபாவளித் திருநாள். இந்த இனிய நாளில் மாநில மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்தப் பாரம்பரியம், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லாட்சியை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு இந்தப் பாரம்பரியம் நமக்கு உத்வேகம் அளிக்கிறது.
நேற்று ஸ்ரீ அயோத்தி தாமில் நடைபெற்ற பிரம்மாண்டமான தீபோத்சவ விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது நமது அதிர்ஷ்டமாகும். 10-வது ஆண்டாக நடைபெற்ற இந்தத் தீபோத்சவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
தற்போதைய புதிய அயோத்தி, திரேதா யுகத்தின் நினைவுகளை மீண்டும் நம் கண்முன்னே கொண்டு வருகிறது. இதைக் காணும் ஒவ்வொரு பக்தரும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்கின்றனர். இன்றைய அயோத்திக்குச் செல்வது ஒவ்வொருவருக்கும் மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது.
அடிமை மனப்பான்மையின் அடையாளங்களோ, அடிமைத்தனத்தின் சின்னங்களோ தற்போது அயோத்தியில் இல்லை. நாம் காணும் அனைத்தும் பகவான் ஸ்ரீராமரின் அளவற்ற அருளாலும், அவரது பக்தர்களின் ஆழ்ந்த பக்தியாலும் உருவானவை.
என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V