Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்கள் பொருத்துவதற்கு ரூ.17.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பேருந்துகளின் இயக்கத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக ரூ.17.99 கோடி மதிப்பீட்டில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்கள் பொருத்தப்படும் என போக்குவரத்துத் துறை சார்பில் 2026 செப்டம்பர் 8-ஆம் தேதி சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் உள்ள 13,490 பேருந்துகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகளும், 13,776 அவசர உதவி பொத்தான் தொகுப்புகளும் பொருத்தப்பட உள்ளன.
இதற்காக போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.17.99 கோடி நிதி விடுவிக்க முதலமைச்சர் விஜய் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்தக் கருவிகள் AIS 140 தரநிலைகளின்படி தயாரிக்கப்பட்டு, மையக் கண்காணிப்பு அமைப்புடன் இணைக்கப்படும்.
இதன்மூலம் ஒவ்வொரு பேருந்தும் எங்கு பயணிக்கிறது, அதன் வேகம் எவ்வளவு, நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் முறையாக இயக்கப்படுகிறதா உள்ளிட்ட விவரங்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும். மேலும், அவசர எச்சரிக்கைகளையும் உடனடியாகக் கண்டறிய முடியும்.
பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அங்குள்ள அவசர உதவி பொத்தானை அழுத்தி கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம்.
இதையடுத்து பேருந்தின் இருப்பிடத்தை உடனடியாகக் கண்டறிந்து, காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து விரைவான உதவிகளை வழங்க முடியும்.
குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதுடன், அவசர காலங்களில் விரைந்து உதவி கிடைக்கவும் இந்தத் திட்டம் உதவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V