Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 09 நவம்பர் (ஹி.ச.)
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு, விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, கோயிலில் உள்ள திருவாட்சி மண்டபத்தில் 2 எல்.இ.டி. திரைகளும், ஆஸ்தான மண்டபத்தில் 3 எல்.இ.டி. திரைகளும் என மொத்தம் 5 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சுவாமியின் நிகழ்ச்சிகளை நேரலையில் கண்டு தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி விழா நாட்களில் தினமும் சுவாமி திருவாட்சி மண்டபத்தை ஆறு முறை வலம் வந்த பிறகு, விரதம் இருக்கும் பக்தர்களுக்குத் தேவையான பால், தினை மாவு மற்றும் பழங்கள் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட உள்ளன. மேலும், பக்தர்களுக்காக தினந்தோறும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்காக கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபம் அருகே தரையில் பிளைவுட் மூலம் அமரும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு குடிநீர் மற்றும் மின்விசிறி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து கூடுதல் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.6.5 கோடி செலவில் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சஷ்டி மண்டபத்திலும் விரதம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தில் தங்கும் பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதுடன், அங்கிருந்து கோயிலுக்குச் சென்று வரவும், கிரிவலம் செல்லவும் முதல்முறையாக இந்த ஆண்டு 3 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சஷ்டி மண்டபத்தில் தங்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி விரதம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN