டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு தீவிரம் -பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்!
புதுடெல்லி, 09 நவம்பர் (ஹி.ச.) டெல்லியில் காற்று மாசுபாடு மீண்டும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிவடைந்துவிட்டாலும், பட்டாசுகளால் வெளியான மாசுத் துகள்கள் தொடர்ந்து காற்றில் நிலைத்திருக்
Delhi


புதுடெல்லி, 09 நவம்பர் (ஹி.ச.)

டெல்லியில் காற்று மாசுபாடு மீண்டும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிவடைந்துவிட்டாலும், பட்டாசுகளால் வெளியான மாசுத் துகள்கள் தொடர்ந்து காற்றில் நிலைத்திருக்கின்றன.

இதனால் சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பவ்ரீன் கந்தாரி,

அதிகாரப்பூர்வ காற்றுத் தரக் குறியீடான AQI அளவு 500 வரை சென்றுள்ளது.400-க்கு மேல் உள்ள காற்றுத் தரம் 'மிகவும் மோசமான நிலை' (Severe) என வகைப்படுத்தப்படுகிறது.

ஏனெனில், அதிகாரப்பூர்வ AQI அளவீட்டில் இதற்கு மேல் கணக்கிட முடியாத வரம்பு உள்ளது.ஆனால், சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பகிர்ந்து வரும் காற்று மாசு தொடர்பான அளவீடுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.

குறிப்பாக, நேற்று காலை 300 ஆக இருந்த PM2.5 நுண்துகள்களின் அளவு, இரவு நேரத்தில் சுமார் 1,000 ஆக உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு முன்பே டெல்லி நச்சுத்தன்மை கொண்ட காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தொடர்ந்து எச்சரித்து வந்தோம்.

இந்நிலையில், பட்டாசு வெடிப்பதால் வெளியாகும் புகை மற்றும் நுண்துகள்கள் காற்று மாசுபாட்டை மேலும் அதிகரித்துள்ளன.

தற்போதைய வானிலைச் சூழல் காரணமாக மாசுத் துகள்கள் காற்றில் கலந்து வெளியேறாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில நாட்களுக்கும் காற்று மாசுபாட்டின் தாக்கம் நீடிக்க வாய்ப்புள்ளது.

அடுத்த சில நாட்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டும் என முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பும் கணித்துள்ளது.

வானிலைச் சூழல் சாதகமாக இல்லை என்பதும், விதிமுறைகளை அமல்படுத்துவதில் போதிய நடவடிக்கைகள் இல்லை என்பதும் ஏற்கெனவே தெரிந்திருந்தது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சூழல் மீண்டும் ஏற்படுகிறது.

காற்று மாசுபாட்டைக் குறைக்க அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில், பட்டாசுகள் மூலம் தேவையற்ற அளவில் மாசு அதிகரிக்க அனுமதிக்கப்படுவது கவலைக்குரியது என பவ்ரீன் கந்தாரி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V