Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 09 நவம்பர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இதன் காரணமாக நகரில் ஆங்காங்கே தீ விபத்துகள் ஏற்பட்டன.
இதுகுறித்து பேசிய தீயணைப்புத் துறை அதிகாரி, தீபாவளி நாளில் மட்டும் 122 தீ விபத்து தொடர்பான அழைப்புகள் வந்ததாகத் தெரிவித்தார்.
இதில் இரண்டு பெரிய தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, ஹைதராபாத்தின் ராஜேந்திரநகர் பகுதியில் உள்ள பிளைவுட் குடோனில் தீப்பற்றியது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மற்ற இடங்களில் ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்துகளுக்கு தீயணைப்புப் படையினர் உடனடியாகச் சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதற்கிடையே, பட்டாசுகளால் ஏற்பட்ட கண் காயங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் இதுவரை 32 பேர் கண் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 பேர் உள்நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஒரு நபரின் பார்வையை மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய AIMIM சட்டமன்ற உறுப்பினர் மஜித் ஹுசைன், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கண் காயங்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் பட்டாசு வெடிக்காமல் சாலையில் நடந்து சென்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ முகமது இப்ராஹிம் கூறுகையில், தீபாவளியை முன்னிட்டு 7 மருத்துவர்கள் மற்றும் 4 சிறப்பு மருத்துவர்கள் என மொத்தம் 11 மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவசரத் தேவை ஏற்பட்டால் இரவு நேரத்திலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனி சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பட்டாசுகளை வெடிக்கும்போது பெரியவர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றிக் கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V