Enter your Email Address to subscribe to our newsletters

மத்தியப் பிரதேசம், 09 நவம்பர் (ஹி.ச.)
மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நள்ளிரவு நேரத்தில் ஒரு வீட்டில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் மட்டும் பாதுகாப்பாக வெளியேறித் தப்பியுள்ளனர்.
இதுகுறித்து கட்னி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் திவாரி கூறுகையில், நள்ளிரவு 12.30 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, 12.45 மணிக்குள் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அதிகாலை 1.30 மணியளவில் கட்டுப்பாட்டு அறைக்கு கூடுதல் உதவி கோரி தகவல் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேலும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. உள்ளூர் மக்களும், இளைஞர்களும் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புப் படையினருடன் இணைந்து செயல்பட்டனர்.
இருப்பினும், வீட்டின் கீழ்தளத்தில் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்த பீங்கான் மற்றும் பாத்திரங்கள் தொடர்பான பொருட்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை கொண்டிருந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தார்.
தீ ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், வீட்டிற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்பதற்காகச் சுவர்கள் உடைக்கப்பட்டன. இதற்கிடையே, அதிகாலை 5 மணியளவில் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் (SDRF) முழு குழுவினருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும், உரிய நிதியுதவி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V