தீபாவளி போனஸ் வழங்காததால் புதுச்சேரியில் குப்பை சேகரிக்கும் பணி முடக்கம் – தெருக்களில் குவியும் குப்பைகள்!
புதுச்சேரி, 09 நவம்பர் (ஹி.ச.) புதுச்சேரியில் குப்பைகளைச் சேகரித்து அகற்றும் பணியை கிரீன் வாரியர் என்ற ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான போனஸ் வழங்கப்படவில்லை எனக் கூற
Wastage


புதுச்சேரி, 09 நவம்பர் (ஹி.ச.)

புதுச்சேரியில் குப்பைகளைச் சேகரித்து அகற்றும் பணியை கிரீன் வாரியர் என்ற ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான போனஸ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இன்று பல்வேறு பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணிகள் நடைபெறவில்லை எனத் தெரிகிறது.

இதனால் நகரின் பல்வேறு தெருக்கள், சாலையோரங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

குறிப்பாக, தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குப்பைகள் மற்றும் பட்டாசுக் கழிவுகள் அதிகளவில் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும் சாலையோரங்களில் கிடக்கும் குப்பைகளைத் தெருநாய்கள் மற்றும் கால்நடைகள் கிளறி உண்பதால் அவை சாலைகள் முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் பயணிக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மழைநீர் வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களில் அடைத்துக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மழைநீர் சீராக வெளியேற முடியாமல் தேங்குவதுடன், துர்நாற்றம் மற்றும் நோய்த்தொற்றுகள் பரவும் சூழலும் உருவாகியுள்ளது.

ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனஸ் தொடர்பான பிரச்சினையால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டு, அதன் விளைவுகளை பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், புதுச்சேரி முழுவதும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை விரைந்து அகற்றி, தூய்மைப் பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறத்தின் குரல் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V