புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு – IMD எச்சரிக்கை!
புதுச்சேரி, 09 நவம்பர் (ஹி.ச.) வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, வம்புப்பட்டு, செல்லிப்பட்டு, வ
Rain


புதுச்சேரி, 09 நவம்பர் (ஹி.ச.)

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, வம்புப்பட்டு, செல்லிப்பட்டு, வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையின் காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதேசமயம், மழையால் புதுச்சேரி பகுதிகளில் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.

இதேபோல், கடலோரப் பகுதிகளான பாகூர், நல்லவாடு, வீராம்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், கடல் சீற்றம் மற்றும் மோசமான வானிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V