Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 நவம்பர் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் துறையூரில் கோரிக்கையுடன் சென்ற நபர் மீது சட்டமன்ற துணை சபாநாயகர் தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
தமிழகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கச் செல்லும்போது அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
துறையூரில் கோரிக்கையுடன் சென்ற நபர் ஒருவர் சட்டமன்ற துணை சபாநாயகரால் தாக்கப்பட்டதாகவும், பின்னர் மிரட்டப்பட்டு காணொளி வெளியிட வைக்கப்பட்டதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் கண்டனத்திற்குரியவை என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றும் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து மௌனம் காக்காமல் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரின் புகாரின் அடிப்படையில் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தாக்குதல் மற்றும் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணையில் உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகாரம் என்பது மக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் குறைகளுக்குச் செவிசாய்ப்பதற்குமே தவிர, அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்கும் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் மக்களின் கருத்துரிமையும், கேள்வி கேட்கும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V