சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கு இன்று முதல் கூடுதல் கலால் வரியுடன் கூடிய 40% ஜிஎஸ்டி வரி அமல்
புதுடெல்லி, 1 பிப்ரவரி (ஹி.ச.) கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) எனும் ஒரு புதிய வரிவிதிப்பு முறை அறிமுகமானது. அப்போதிலிருந்தே சிகரெட், புகையிலை போன்ற நச்சு பொருட்கள் மற்றும் பான் மசாலா ஆகியவை பா
இன்று முதல் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கு கூடுதல் கலால் வரியுடன் கூடிய 40% ஜிஎஸ்டி வரி அமல்


புதுடெல்லி, 1 பிப்ரவரி (ஹி.ச.)

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) எனும் ஒரு புதிய வரிவிதிப்பு முறை அறிமுகமானது.

அப்போதிலிருந்தே சிகரெட், புகையிலை போன்ற நச்சு பொருட்கள் மற்றும் பான் மசாலா ஆகியவை பாவப் பொருட்கள் என கருதப்பட்டு அவற்றிற்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.

கடந்த வருடம் (2025) இறுதியாக நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புகையிலை முதலான உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சு பொருட்களுக்கான வரியானது மறுசீராய்வு செய்யப்பட்டது.

அதன்படி சிகரெட் மற்றும் புகையிலைக்கான ஜிஎஸ்டி வரியானது 28%-லிருந்து 40% ஆக அதிகரிக்கப்பட்டது. மேலும் இது இந்த வருடம் (2026) பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகரெட், புகையிலை பண்டங்கள், பான் மசாலா ஆகியவற்றின் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கலால் வரியுடன் கூடிய 40% ஜிஎஸ்டி வரியானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய விதிமுறையின்படி பாக்கெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் சில்லறை விற்பனை விலையை வைத்து ஜிஎஸ்டி வரியானது கணக்கிடப்படும்.

பான் மசாலா உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இன்று முதல் சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ் புதிய பதிவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் அனைத்து பேக்கிங் எந்திரங்களையும் உள்ளடக்கிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அதோடு அந்த கேமராக்களில் பதிவாகும் வீடியோ பதிவுகளை குறைந்தது 24 மாதங்களுக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.

சிகரெட்டின் அளவை பொறுத்து ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ரூ.2.10 முதல் அதிகபட்சமாக ரூ.8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது. 65 மி.மீ நீளமுள்ள ஒரு சிகரெட்டுக்கு ரூ.2.10 வரையிலும், 70 மி.மீ நீளமுள்ள ஒரு சிகரெட்டுக்கு 4 ரூபாயும், 75 மி.மீ நீளமுள்ள ஒரு சிகரெட்டுக்கு 5.4 ரூபாய் வரையிலும் கலால் வரி உயர்த்தப்படுகிறது.

இது புதிதாக நடைமுறைக்கு வரவிருக்கும் 40% ஜிஎஸ்டி வரியை தவிர்த்து விதிக்கப்படும் கூடுதல் கலால் வரியாகும்.

மென்று தின்னும் புகையிலைக்கு 82% கலால் வரியும், குட்காவுக்கு 91% கலால் வரியும், பான் மசாலாவுக்கு 88% கலால் வரியும் விதிக்கப்பட உள்ளது.

கிரிசில் ரேட்டிங்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி இந்த கூடுதல் கலால் வரி விதிப்பால் உள்நாட்டு சிகரெட் சந்தை இந்த நிதியாண்டில் சுமார் 68% வரை சரியும் என கணிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM