Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.) பணிகளானது கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி துவங்கியது.
எஸ்.ஐ.ஆர். பணிகளின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட பூர்வாங்க வாக்காளர் பட்டியலிலே 97.37 இலட்சம் பெயர்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதன் விளைவாக, முன்னதாக 6.41 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 5.44 கோடியாக குறைந்தது.
காலமான வாக்காளர்களின் எண்ணிக்கை 26 இலட்சத்து 94 ஆயிரத்து 672 நபர்கள், நிரந்தரமாக வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 இலட்சத்து 44 ஆயிரத்து 881 நபர்கள், இரட்டைப் பதிவு செய்த வாக்காளர்கள் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 278 நபர்கள் உட்பட மொத்தம் 97 இலட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்களின் விவரங்கள் நீக்கப்பட்டன.
நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என்ற கணக்கில் இடம்பெறும் 66 இலட்சத்து 44 ஆயிரத்து 881 நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான கால அவகாசம் 30-ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 27-ஆம் தேதி வரைக்கும் 16 இலட்சத்து 2 ஆயிரத்து 555 நபர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் புதிதாக தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். பெயர் நீக்கத்திற்காக 1 இலட்சத்து 3 ஆயிரத்து 115 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் கடந்த மாதம் 30-ஆம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், மேலும் 10 நாட்களுக்கு அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திமுக தாக்கல் செய்த வழக்கின் காரணமாக, தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களைச் சேர்ப்பதற்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டது.
இந்நிலையில், பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
இணையவழி வாயிலாக 10.82 இலட்சம் பேரும், நேரடியாக 24.47 இலட்சம் பேரும் விண்ணப்பித்திருப்பதாகவும் அர்ச்சனா பட்நாயக் அவர்கள் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM