Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 பிப்ரவரி (ஹி.ச.)
முருகன் பெருமானின் தைப்பூச திருவிழா இன்று (பிப்ரவரி 01) முருகன் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தைப்பூசத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டு அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல் என வாழ்வியல் கூறுகள் வழி, நம் தமிழ் மொழி தந்த தொன்ம இலக்கியம் என யாவும் பெற்று பண்பாட்டு செழுமைமிக்க தமிழ்ப் பேரினத்தின் இறையோன் நம்மின மூதாதை முப்பாட்டன் முருகப்பெருமானாவார்.
தமிழர் பண்பாட்டு அசைவுகளைத் தனது கதைகளோடு தாங்கி, தமிழரின் திணையொழுக்கமாகிய குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐவகை நிலங்கள் முழுமையும் விரவியிருக்கும் இறைவனாக
முப்பாட்டன் முருகப்பெருமான் திகழ்கிறார்.
உலகம் முழுமையும் எங்கெல்லாம் தமிழர்கள் பெருமளவு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் முருகப்பெருமானுக்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறார்.
ஈழம், சிங்கப்பூர், மலேசியா, கனடா, இலண்டன், சுவிஸ், பிரான்ஸ், மொருசியசு என எல்லா இடங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டு தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார்.
‘பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்’ என்று கலித்தொகை காட்டும் முதுமொழியின்படி தொல்தமிழர் தங்கள் வாழ்வியல் பாடுகளின் மூலம் பெற்ற பண்பட்ட அனுபவங்களே
தமிழர் பண்பாடாகியது.
அப்படி நமது மூத்தோர் வழி பயணப்படுவது, மூத்தோர்
வழி பாடுபடுவதே தனித்துவமிக்க தமிழர் மெய்யியல் வழிபாடாகும்.
அத்தகைய தமிழர் மெய்யியல் பண்பாட்டு நிகழ்வு சிறப்புறும் வகையில் திருமுருக
வழிபாட்டுத் திருநாளான
தைப்பூசப் பெருவிழாவினை
உலகெங்கும் தாய்த்தமிழ் சொந்தங்கள் கொண்டாடி,
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்!
தமிழ் இறைவன்! நம் முப்பாட்டன்!
திருமுருகப்பெருமமான் திருப்புகழை வணங்கிப் போற்றுவோம்!
உலகத் தமிழர் அனைவருக்கும்
தைப்பூசத் திருநாள்
வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b