இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைகளில் ஏற அனுமதி
கோவை, 1 பிப்ரவரி (ஹி.ச.) கோயம்புத்தூரின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் தாழ்வாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஈசனின் ஆலயம் அமைந்திருக்கிறது. தென்னக கயிலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி ஈசன் சுயம்பு லிங்கமாக ஏழாவது குன்றின் உச்சியில் வீற்றி
இன்று  முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைகளில் ஏற அனுமதி


கோவை, 1 பிப்ரவரி (ஹி.ச.)

கோயம்புத்தூரின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் தாழ்வாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஈசனின் ஆலயம் அமைந்திருக்கிறது.

தென்னக கயிலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி ஈசன் சுயம்பு லிங்கமாக ஏழாவது குன்றின் உச்சியில் வீற்றிருக்கிறார்.

அடர்ந்த காடுகள் சூழ்ந்திருப்பதால், வனத்துறையானது வருடம் முழுவதும் ஆலயத்தினுள் செல்ல தடை விதித்துள்ளது.

இந்த மலையை அடைய அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் கடினமான மலைப்பாதைகள் வழியாக நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதால் மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் அனுமதி மறுக்கப்படுகிறது.

பொதுவாக, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் ஆணைப்படி பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மாவட்ட வனத்துறை அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

உடல் தகுதி உள்ள பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியங்கிரிக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், உடல் உபாதைகள் உள்ளவர்கள் மலையேற்றத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

யாத்ரீகர்களின் நலனுக்காக, மலையின் அடிவாரத்தில் ஆம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று கோவை மாவட்ட வன அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மலையடிவாரத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

அதோடு மட்டுமல்லாமல், மூன்றாவது, ஆறாவது மற்றும் ஏழாவது சிகரங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். அங்கு மருத்துவ குழுவினரும், வனத்துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்றுவார்கள்.

மேலும் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை ஊழியர்கள் மலையடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதே சமயத்தில் எட்டு நபர்களை கொண்ட கண்காணிப்பு குழு மலையில் ரோந்து சுற்றி வரும்.

சென்ற வருடம் மலையேற்றத்தின்போது ஒன்பது நபர்கள் உயிரிழந்தனர், எனவே இந்த முறை உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மாவட்ட வன அலுவலர் அவர்கள் கூறினார்.

மேலும், மலை ஏறும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உட்பட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மலையில் எந்தவிதமான போதை தரும் பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது என்று பக்தர்களுக்கு கண்டிப்பான அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் மலையடிவாரப் பகுதிகளை தீவிரமாக கண்காணிப்பார்கள். யாரேனும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் உடைமைகள் காகிதத்தில் சுற்றப்பட்டு திருப்பி அனுப்பப்படும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM