Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். தலைநகர் சென்னையில் திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சியினர் தீவிரமாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 60-வது வார்டு 8 பகுதியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த வட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அந்த பகுதியில் அந்தக் கட்சிக்கான செல்வாக்கு எவ்வளவு உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ள கருத்துக்கணிப்பு மற்றும் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த திமுக நிர்வாகிகள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் முற்றி போய் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில், திமுக வட்டச் செயலாளர் கவியரசு என்பவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த வட்ட நிர்வாகி பாண்டி முகேஷ் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு தற்போது அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையானது வழங்கப்பட்டு வருகிறது.
பரபரப்பான பகுதியில் நடந்த இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam