Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 12 பிப்ரவரி (ஹி.ச.)
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மாதாந்திர உதவி தொகையை, ஆந்திரா, பாண்டிச்சேரி அரசு வழங்குவது போல் பாதிப்பின் அடிப்படையில் 6 ஆயிரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் என உயர்த்தி வழங்க கோரி கடந்த 2024 ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர்.
ஆனால் இதுவரை அரசு இதனை நிறைவேற்றாததால், தமிழக அரசை கண்டித்தும், உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 3வது நாளாக இன்று (பிப்ரவரி 12) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வண்ணார்பேட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தின்போது மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி நிதியை உயர்த்திதரக்கோரி கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட சங்கத்தினர் 50 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b