Enter your Email Address to subscribe to our newsletters

வங்கதேசம், 12 பிப்ரவரி (ஹி.ச.)
அயல் நாடான வங்கதேசத்தில் 13-வது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.
எந்தவிதமான வன்முறையும் தலைதூக்காமல், அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க, இதுவரை இல்லாத வகையில் சுமார் 10 லட்சம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அரணாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் கிளர்ச்சிகள் காட்டுத் தீயாய் பரவியதை அடுத்து, ஷேக் ஹசீனா தனது பதவியை உதறிவிட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். போராட்டங்களை அடக்க வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாக அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் களம் காண தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் புதல்வர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் பழைய கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி மோதல் உருவாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் 300 இடங்களுக்கும் தேர்தல் திருவிழா அறிவிக்கப்பட்டது. ஒரு வேட்பாளரின் மறைவு காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், எஞ்சிய 299 தொகுதிகளில் 50 அரசியல் கட்சிகளைச் சார்ந்த 1,755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேட்சைகள் போட்டி களத்தில் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் 3.58 சதவீத புதிய வாக்காளர்கள் உட்பட மொத்தம் 12.77 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும் 8 லட்சம் வங்கதேச மக்கள், தபால் வாக்கு மூலம் முதன்முறையாக வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 42,659 வாக்குச் சாவடிகளில், 24,000 இடங்கள் கலவர பூமியாக மாற வாய்ப்புள்ளவை என்று கண்டறியப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 90 சதவீத வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இன்று காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். 45 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், இந்தத் தேர்தலை உன்னிப்பாக கவனிக்க உள்ளனர்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் முடிவுகள் எந்தவித தாமதமும் இன்றி வெளியிடப்படும் என்று வங்கதேச தலைமை தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம்.நசீா் உதின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM