காங்கிரஸ் எம்.பிகள் மக்களவை சபாநாயகரை தரக்குறைவாக பேசினர் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு
புதுடெல்லி, 12 பிப்ரவரி (ஹி.ச.) கடந்த 4ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலுரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி பெண் எம்.பிக்கள் பிரதமர் மோடி இருக்கை அருகே ஆர்
Minister Kiren Rijiju


புதுடெல்லி, 12 பிப்ரவரி (ஹி.ச.)

கடந்த 4ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலுரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி பெண் எம்.பிக்கள் பிரதமர் மோடி இருக்கை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் பிரதமரை சபைக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுகொண்டதாக தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார். இதனால், மக்களவையில் பிரதமர் உரையின்றி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மோடி ஏன் பதிலுரையாற்றவில்லை என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பியபோது, ஜோதிமணி, சுதா உள்ளிட்ட எதிர்க்கட்சி பெண் எம்.பிக்கள் பிரதமர் மோடியின் இருக்கையை சூழ்ந்து அவரை தாக்க சதி செய்ததால் அவரை அவைக்கு வரவேண்டாம் என தான் கூறியதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டை நிராகரித்த எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை எதிர்கொள்வதற்கு பயப்படுவதால் தான் அவர் உரை ரத்து செய்யப்பட்டதாக விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை போடுவதாகக் கூறி சபாநாயகர் ஓம் பிர்லா மீது மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் அளித்தது.

இத்தகைய சூழலில் தான் மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் பதாகைகளுடன் போராடி பிரதமர் இருக்கையை சூழ்ந்த வீடியோ காட்சியை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் மீண்டும் இன்று (12.02.2026) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அலுவலக அறைக்குள் நுழைந்து அவரை தரக்குறைவாக பேசியதாகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

20 முதல் 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் வரை, சபாநாயகரின் அறைக்குள் நுழைந்து, அவரை அவதூறாகப் பேசி, பிரதமரை மிரட்டியபோது, ஒரு காங்கிரஸ் எம்.பி.யால் எடுக்கப்பட்ட சட்டவிரோத வீடியோ காட்சி இதுவாகும்.

எங்கள் (பாஜக) கட்சி விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் நம்பிக்கை கொண்டுள்ளது. எம்.பி.க்கள் இதுபோன்று உடல் ரீதியாக அச்சுறுத்துவதை ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை.

எனத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b