Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத், 12 பிப்ரவரி (ஹி.ச.)
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த 13வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 187 ரன்கள் குவித்தது. டிகாக் 59 ரன்களிலும் ரிங்கல்டன் 61 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒரு பக்கம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதன் விளைவாக போட்டி சமனில் முடிந்தது.
இதன் காரணமாக சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி ஒரு ஓவரில் 17 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 18 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 17 ரன்கள் எடுத்தது.
இதனால் ஆட்டம் மீண்டும் சமன் ஆனது. இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இதன் விளைவாக 2வது சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 23 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் அடித்தாலும் ஆப்கானிஸ்தான் 19 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் விளைவாக தென்னாப்பிரிக்கா வெற்றி வாகை சூடியது.
Hindusthan Samachar / JANAKI RAM