சென்னையில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டம்
சென்னை, 12 பிப்ரவரி (ஹி.ச.) மத்திய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கைக் கண்டித்தும், மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரியும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டனப் போராட்டங்கள் ந
சென்னையில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டம்


சென்னை, 12 பிப்ரவரி (ஹி.ச.)

மத்திய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கைக் கண்டித்தும், மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரியும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.

சென்னையில் திருவொற்றியூர், அம்பத்தூர், அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், கிண்டி தொழிற்பேட்டை, பல்லாவரம் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சுமார் 7,000 முதல் 8,000 பேர் வரை கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தக் கண்டனப் போராட்டத்தில் தமிழகத்தின் முதன்மையான 8 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் கைகோர்த்தன. தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொமுச), சிஐடியு , ஏஐடியுசி , ஐஎன்டியுசி , எச்.எம்.எஸ் , ஏஐசிசிடியு , ஏஐயுடியுசி , யுடியுசி மற்றும் டி.யு.சி.சி ஆகிய அமைப்புகள் முழுமையாகப் பங்கேற்றன. மேலும், டெல்லி போராட்டத்தை முன்னெடுத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.

சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்பேட்டைகளில் உள்ள பல நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் தங்களின் வேலைகளைப் புறக்கணித்துவிட்டு பெருந்திரளாகப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களைக் காக்கவும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் பெருவாரியாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b