Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமாரி, 12 பிப்ரவரி (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் நல சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தினால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசுப் பேருந்துகள் கேரளாவுக்குள் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கேரளா நோக்கிச் செல்லும் அனைத்து தமிழகப் பேருந்துகளும் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இன்று இயக்கப்படுகின்றன.
கேரள அரசுப் பேருந்துகள் முழுமையாக இயங்காத நிலையில், தமிழகப் பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே செல்வதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
முக்கியமாக மருத்துவத் தேவைகளுக்காக திருவனந்தபுரம் செல்பவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அன்றாடத் தொழிலாளர்கள் எல்லையிலேயே இறக்கிவிடப்பட்டனர்.
களியக்காவிளையில் இருந்து கேரளா பகுதிக்குள் செல்ல ஆட்டோ அல்லது வாடகை வாகனங்கள் கிடைக்காததால், பல கிலோமீட்டர் தூரம் பொதுமக்கள் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி எல்லையோரப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை சீரானதும் மீண்டும் முழுமையாகப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / vidya.b