கட்டிடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை, 13 பிப்ரவரி (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள இளவங்காடு கிராமத்தைச் சேர்ந்த முனியன் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த வீட்டை இடித்துச் சீரமைப்பதற்கான பணிகள் இன்று (13.02.20
2 school students


திருவண்ணாமலை, 13 பிப்ரவரி (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள இளவங்காடு கிராமத்தைச் சேர்ந்த முனியன் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த வீட்டை இடித்துச் சீரமைப்பதற்கான பணிகள் இன்று (13.02.2026) காலையில் நடைபெற்று வந்தது.

அப்போது முனியனின் உறவினர்களின் மகன்கள் 11ஆம் வகுப்பு மாணவன் அபினேஷ் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவன் முகேஷ் உள்ளிட்ட 3 மாணவர்கள் அங்கு இருந்துள்ளனர்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வீட்டின் கட்டடம் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகிய இரு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 வயது சிறுவன் ஒருவன் பலத்த காயங்களுடன் வந்தவாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவனை மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்து சம்பவர் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் போலீசார் உயிரிழந்த இரு மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு தொகுப்பு வீட்டைச் சீரமைப்பதற்கு இடிக்கும் போது கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b