தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் ஆலோசனை
சென்னை, 13 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மா
Election Commission of India


சென்னை, 13 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, எஸ்.ஐ.ஆர் பணிகளும் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டன.

மேலும், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி 6.41 கோடி வக்காளர்களில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

அதாவது எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகு, தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்களும், குறிப்பாக சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 25ஆயிரத்து 18 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்களுக்காகவும், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்காகவும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

வாக்காளர் சேர்த்தல், திருத்தம் மற்றும் எதிர்ப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் பிப்ரவரி 10ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து, அதனுடன் தொடர்புடைய படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாக பெற்று விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் அறிவித்த இறுதி நாள் பிப்ரவரி 10 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 17 லட்சத்து 10 ஆயிரத்து 462 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

அதே போல் வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனைகள் குறித்து 1லட்சத்து 84 ஆயிரத்து 664 பேர் படிவம் 7 விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர்.

முகவரியை திருத்தம் செய்ய 5 லட்சத்து 51 ஆயிரத்து 993 பேர் படிவம் 8ஐ வழங்கியுள்ளனர்.

அதேபோல் இணையதளம் வழியாக இதுவரை 5 லட்சத்து 73 ஆயிரத்து 63 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனைகள் குறித்து 15 ஆயிரத்து 935 பேர் படிவம் 7 விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்.

முகவரியை திருத்தம் செய்ய 4 லட்சத்து 38 ஆயிரத்து 284 பேர் படிவம் 8ஐ நிரப்பி சமர்பித்துள்ளனர்.

ஆக மொத்தம், இதுவரை நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் பெறப்பட்ட 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 விண்ணப்பங்களும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் செயலாக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் சென்னை MRC நகரில் உள்ள பிரபல தனியார் விடுதியில் நேற்று (பிப் 12) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரயில்வே, துணை ராணுவம், தபால் துறை, சிவில் விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இன்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடைப்பெற உள்ளது.

இதில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் போன்றவை பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

தேவையான முன்னேற்பாடு பணிகள் நிறைவுபெற்ற பிறகு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN