மகளிர் உரிமைத் தொகையை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை - அமைச்சர் ரகுபதி
சென்னை, 13 பிப்ரவரி (ஹி.ச.) சென்னையில் இன்று தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் இம்மாதம் ரூ.5,000 வர
மகளிர் உரிமைத் தொகையை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை -  அமைச்சர் ரகுபதி


சென்னை, 13 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னையில் இன்று தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் இம்மாதம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி முதல்வர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நாங்கள் இந்தத் திட்டத்தை அறிவித்துவிட்டு செய்தோம் என்றால், உடனே நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு வாங்கி விடுவார்கள். இதனால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்காமல் போய்விடும். எனவேதான் அதற்கு முன்னதாகவே காலையிலேயே முதல்வர் இதை அறிவித்தார்.

பாஜகவும் அதிமுகவும் எத்தனை கூட்டு சதிகளை செய்தாலும், திராவிட மாடல் 2.0 அமைவதையோ, அதன் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை தடுக்க முடியாது.

முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு கொடுத்த பணம் டாஸ்மாக்கு வரவில்லை. பெண்கள் இதை வரவேற்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகையை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை. திமுக அரசைப் போன்று பாஜக ஆளும் மாநிலங்களிலும் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவும், அதிமுகவும் இத்திட்டத்தை முடக்க சதி செய்ததால்தான் முன்கூட்டியே மகளிர் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது .

இரண்டு வாரத்துக்குள் தமிழக மக்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. அனைவரும், தேர்தலுக்கு முன்னதாக வாக்குறுதிகள் தான் கொடுப்பார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்னதாக அதை நிறைவேற்றிய ஆட்சி திமுகதான்.

இலவச திட்டங்களை வழங்குவது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது. இதனால் வரி செலுத்துவோரின் பணம் வீணாகிறது என்று வசை பாடியவர் பிரதமர் மோடி. மக்களுக்கு பயன் தருகிற விடியல் பயணம் திட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. வரிப் பணத்தை வீணாக்கும் செயல் என பேசினார், ஆனால், அது மக்களை வாழவைக்கும் செயல் என சொன்னவர் முதல்வர் ஸ்டாலின்.

பெண்களுக்கு விடியல் பயணம் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது அதை கொச்சைப்படுத்தியவர் பொய்ப்பாடி பழனிசாமி. கரோனாவை காரணம் காட்டி தாலிக்கு தங்கம், லேப்டாப் திட்டங்களை நிறுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. மகளிர் உரிமை தொகையை நிறுத்தி வைக்க பாஜக, அதிமுக சதி செய்கிறது.

சட்டமன்றத் தேர்தலை சாக்காக வைத்து இந்தத் திட்டத்தை முடக்க பாஜக அதிமுக இணைந்து நீதிமன்ற வழக்குகள் மூலம் திட்டம் போட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b