Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 பிப்ரவரி (ஹி.ச.)
கடந்த 2010ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, திருவான்மியூரை சேர்ந்த ஏழுமலை என்பவர் தனது வீட்டின் முன்பு நின்று மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த போது, முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக சரவணன், கந்தகுமார், ஸ்டீபன்ராஜ், சத்துரு, குரு, அப்பு, கிருஷ்ணகுமார், புஷ்பராஜ், குருமூர்த்தி, சீனிவாசன், நாகராஜ், தாமு, லட்சுமி மற்றும் செல்வி உள்ளிட்ட 16 பேர் மீது J6 திருவான்மியூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
தொடர்ந்து, கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை 7 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், காவல்துறை போதிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என தெரிவித்து, 16 பேரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போதே குற்றம் சாட்டப்பட்ட கந்தகுமார், குரு, கிருஷ்ணகுமார், புஷ்பராஜ், தாமு ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, இந்த வழக்கின் சாட்சிகளையும் தடயங்களையும் மீண்டும் மறு ஆய்வு செய்தது.
குறிப்பாக, கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஏழுமலையின் மனைவி மற்றும் பிள்ளைகளின் வாக்குமூலங்கள் மிகவும் நம்பகத்தன்மையுடன் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். சிறிய முரண்பாடுகளை காரணம் காட்டி, திட்டமிட்டு கொலை செய்த ஒரு சட்டவிரோத கும்பலை விடுவிக்க முடியாது என்று கூறி, விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 9 பேரை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்ததோடு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஸ்டீபன்ராஜ் மற்றும் சந்துரு ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்தனர். மீதமுள்ள சரவணன், அப்பு, குருமூர்த்தி உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அவர்களை உடனடியாக கைது செய்து, வரும் பிப்ரவரி 16ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றைய தினம் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN