அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் சங்கம் கோரிக்கை
திருவாரூர், 14 பிப்ரவரி (ஹி.ச.) தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், ஐக்கிய விவசாயிகள் சங்கம் (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான பிஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இன்று
அமெரிக்காவுடனான   தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் சங்கம் கோரிக்கை


திருவாரூர், 14 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், ஐக்கிய விவசாயிகள் சங்கம்

(அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான பிஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இன்று (பிப்ரவரி 14) காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அறுவடை ஆய்வறிக்கை செய்யாமலேயே இழப்பீடு கிடையாது என அறிவிக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காப்பீட்டு நிறுவனங்களில் அதிகாரமிக்க அரசியல்வாதிகள் தன் குடும்பத்துக்கு சொந்தமாக்கிக்கொண்டு, விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை அனுமதிக்க முடியாது. குறிப்பாக, மன்னார்குடி அருகே நீடாமங்கலம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் பயிர்கள் அழிந்து சேதமாகி உள்ளன.

அக்கிராமங்களில் அறுவடை ஆய்வறிக்கை மேற்கொள்ளாமலேயே இழப்பீடு கிடையாது என அறிவிப்பு செய்துள்ளதை ஏற்க முடியாது. இதுகுறித்து விரைவில் தீவிரமான போராட்டத்தில் களமிறங்க நேரிடும். நெல் கொள்முதல் நிலையங்களில் 2 கிலோ வரையிலும் கூடுதல் எடை வைத்து கொள்முதல் செய்வதாக வருகிற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

உடனடியாக ஆய்வு செய்து, எடை ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் கொள்முதல் நிலைய அலுவலர்களை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

மத்திய அரசு அமெரிக்காவோடு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இந்திய வேளாண் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு 18 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்காவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யக்கூடிய பால், சோளம் உள்ளிட்ட வேளாண் உணவுப் பொருட்கள் தமிழகத்தில் வரியில்லாமல் இறக்குமதி செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் அழிவுப்பாதைக்கு செல்ல நேரிடும். மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்கள் சந்தைப்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் தற்கொலைகளுக்கு தள்ளப்படுவார்கள்.

எனவே, உடனடியாக மத்திய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்திய விவசாயிகளுக்கு பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் ஏற்க முடியாது. எனவே இதனை கண்டிக்கும் வகையிலும், திரும்ப பெற வலியுறுத்தியும் வர்த்தக ஒப்பந்த நகலை இந்தியா முழுமையிலும் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் தீயிட்டு கொளுத்த வேண்டுமென, தேசிய குழு அறைகூவல் விடுத்துள்ளது. அதனை ஏற்று தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் ஒப்பந்த நகலை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b