20 ஓவர் உலகக் கோப்பை - நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
அகமதாபாத், 15 பிப்ரவரி (ஹி.ச.) 10வது டி20 உலக கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் 20 வலிமையான அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவ
20 ஓவர் உலகக் கோப்பை -  நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி


அகமதாபாத், 15 பிப்ரவரி (ஹி.ச.)

10வது டி20 உலக கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் 20 வலிமையான அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் நேற்றைய 24வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

அகமதாபாத்தில் நடைபெற்ற் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் டிம் சீபாராட் 13 ரன்களில் வெளியேறினார். பின்னர் பின் ஆலன் 31 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். ரச்சின் ரவீந்திரா 13 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 1 ரன்னும் எடுத்து ஏமாற்றமளித்தனர்.

மார்க் சேப்மேன் மற்றும் டேரில் மிட்சேல் அதிரடியாக ஆடினர். மார்க் சேப்மேன் 48 ரன்களும், டேரில் மிட்சேல் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முடிவில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணியில் மார்கோ ஜான்சன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

176 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி அதிரடியாக விளையாடியது.

கேப்டன் மார்க்கரம் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக மார்க்கரம் 86 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM