Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ), தன் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கி வருகிறது.
இந்த ஆப் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஆப்-ன் சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த புதிய மொபைல் ஆப் மூலம், இபிஎஃப்ஓ வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ மூலம் நேரடியாக தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். இதற்காக தொழிலாளர் அமைச்சகம் ஒரு புதுமையான திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதில், பிஎஃப் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பாதுகாப்பாக வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இபிஎஃப்ஓ வாடிக்கையாளர்கள் தங்கள் மொத்த பிஎஃப் தொகையில் கணிசமான பகுதியை யுபிஐ மூலம் வங்கி கணக்கிற்கு மாற்றி, எளிதாகப் பயன்படுத்த முடியும். பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் வேறு சில வசதிகளையும் பெறலாம்.
அதாவது, பிஎஃப் வாடிக்கையாளர்கள் யுபிஐ வாயிலாக பணத்தை எடுப்பது, பாஸ்புக் பேலன்ஸ் போன்ற பல சேவைகளையும் இந்த புதிய இபிஎஃப்ஓ மொபைல் ஆப் மூலம் பெறலாம். தற்போது வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கை அணுகவும், சேவைகளைப் பெறவும் இபிஎஃப்ஓ போர்டல் அல்லது 'உமாங்' செயலியை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இபிஎஃப்ஓ அமைப்பு அறிமுகப்படுத்த இருக்கும் புதிய மொபைல் ஆப் தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது. இதில் உள்ள சில குறைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளுக்கு மாற்றக்கூடிய பிஎஃப் தொகையை இந்த மொபைல் ஆப் மூலம் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக, பிஎஃப் பணத்தை மாற்றுவதற்கான பரிவர்த்தனையை நிறைவு செய்ய பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் யுபிஐ பின் நம்பரை பயன்படுத்தலாம். இது வங்கி கணக்குகளுக்கு இடையே பாதுகாப்பான பண பரிமாற்றத்தை உறுதி செய்யும். தற்போது இந்த புதிய செயலியைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களை இபிஎஃப்ஓ அமைப்பு சரிசெய்து வருகிறது. இதனால், இந்த ஆப் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யும்போது, எந்தவித தடங்கலும் இல்லாமல், அனைத்து வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
மேலும், தொழிலாளர் அமைச்சகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த புதிய செயலியை பிரமாண்டமாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இது தவிர பிஎஃப் திட்டத்தில் நிறைய புதுமைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஊழியர்கள் சந்திக்கும் பல பிரச்சினைகள் அவ்வப்போது களையப்பட்டு வருகின்றன. ஆனாலும், பிஎஃப் பணக் கோரிக்கைகளில் ஏற்படும் தாமதம், நிராகரிப்புகள், போர்ட்டலில் ஏற்படும் தொழிநுட்ப கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
மேலும், மொபைல் எண் சரியாக இருந்தும் ஓடிபி வராமல் இருப்பது, போர்ட்டலில் இருந்து தானாக வெளியேறுவது, பாஸ்புக்கை சரியான நேரத்தில் புதுப்பிக்க முடியாதது போன்ற சிக்கல்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கின்றன.
இது போன்ற சூழலில் புதிய இபிஎஃப்ஓ ஆப் அறிமுகமாக இருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இந்த புதிய செயலியில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM