Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவானது இந்தியா மற்றும் இலங்கையின் மைதானங்களில் கோலாகலமாக அரங்கேறி வருகிறது.
இதில் பலம் வாய்ந்த 20 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று பலப்பரீட்சை செய்து வருகின்றன.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சுற்றுக்குத் முன்னேறும். கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணியானது, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை ('ஏ' பிரிவு) எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச முடிவு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் அபிஷேக் சர்மா ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு திலக் வர்மா களம் இறங்கினார். அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் அவருடன் கைகோர்த்து அதிரடியாக விளையாடினார். பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அரைசதம் அடித்து அசத்தினார். 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்த இஷான் கிஷன், சைம் ஆயுப் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
திலக் வர்மா 25 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களிலும் தங்களது விக்கெட்களை இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் ஷிவம் துபே ஓரளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடினார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இதன் விளைவாக பாகிஸ்தான் அணிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சவாலான இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷாஹிப்சாதா பர்ஹான் ரன் எதுவும் எடுக்காமல் ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரில் சைம் ஆயுப் 6 ரன்களில் ஜஸ்பிரித் பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பாபர் அசாம் 5 ரன்களில் அக்சர் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் அகாவும் 4 ரன்களில் பும்ரா பந்தில் வெளியேறினார்.
முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் வெளியேறியதால் பாகிஸ்தான் அணியால் மீண்டு வர முடியவில்லை. ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்தே இந்தியாவின் கை ஓங்கியிருந்தது.
முடிவில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோற்றது. இதன் மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹாட்ரிக் வெற்றியை சுவைத்ததோடு, சூப்பர் 8 சுற்றுக்கும் இந்திய அணி முன்னேறியது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Hindusthan Samachar / JANAKI RAM