Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.
இதே நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை மற்றும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வருகிற
20-ந் தேதி அவைக்கு அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் பட்ஜெட் என்ற பெயரில் தமிழக அரசு மக்களுக்கு காது குத்துவதாக அ.தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது.
இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வருகை தந்து கவனம் ஈர்த்தனர் அதிமுக உறுப்பினர்கள்.
இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள அழைப்பிதழில் கூறியிருப்பதாவது:-
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் முன்னின்று காது குத்துவார்.
மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
பி.கு: சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் மொய் வைக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏ-க்கள், அதை அனைவரும் பார்க்கும்படி கைகளில் ஏந்தி வந்தனர்.
Hindusthan Samachar / vidya.b