மதுரையில் பிப்ரவரி 21-ஆம் தேதி புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.) மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” என்ற பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமுக்கம் சந்திப்பில் இரு
மதுரையில் பிப்ரவரி  21-ஆம் தேதி புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)

மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” என்ற பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமுக்கம் சந்திப்பில் இருந்து யானைக்கல் அண்ணா சிலை சந்திப்பு வரை அமைக்கப்பட்டுள்ள இந்த உயர்மட்ட பாலம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் இந்த சாலை மேம்பாலப் பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை நகரின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் முக்கிய இணைப்பாக இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமுக்கம் பகுதியில் தொடங்கும் பாலம், கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் முடிவடைகிறது. வைகை ஆற்றின் மீது ஏற்கனவே உள்ள ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்திற்கு இணையாக, புதிய உயர்மட்ட பாலமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

யானைக்கல் அண்ணா சிலை சந்திப்பில் இருந்து தமுக்கம் வரை உள்ள ஒருபக்க கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இறுதிக்கட்டமாக பூச்சு வேலைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய மேம்பாலத்தை வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எக்ஸ் சமூக வலைதள பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,

நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது திராவிட மாடலில், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்”!

தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம் அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.

ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்.

என்று குறிப்பிட்டு உள்ளார்.

Hindusthan Samachar / vidya.b