ஈசிஆரில் நடந்த இரட்டைக் கொலை - தம்பதியரை கொலை செய்தவர் கைது!
சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) அருகே உள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (எ) பார்த்தசாரதி (42) மற்றும் ஜமுனா தம்பதி. கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக
Case


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) அருகே உள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (எ) பார்த்தசாரதி (42) மற்றும் ஜமுனா தம்பதி. கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜமுனா குழந்தைகளுடன் சைதாப்பேட்டையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால், பார்த்தசாரதி தனியாக வசித்து வருகிறார். அதாவது, இவரின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வரும் சுசில் (35) என்பவர்களுக்கும், ஜமுனாவிற்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தான் ஜமுனா பார்த்தசாரதியை விட்டு பிரிந்து சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுசிலின் மனைவி கிரிஜாவிற்கும் பார்த்தசாரதிக்கும் இடையே வெளியே வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ‘மனைவியை வைத்து ஒழுங்காக வாழத் தெரியாதவன்’ என கிரிஜா திட்டியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மனைவியை பிரிந்து விரக்தியில் இருந்த பார்த்தசாரதிக்கு, இந்த வார்த்தை மேலும் கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பார்த்தசாரதி வேகமாக வீட்டிற்குள் சென்று, கத்தியை எடுத்து வந்து, சுசில் (35) மற்றும் அவரது மனைவி கிரிஜா (29) இருவரையும் சரமாரியாக குத்தியுள்ளார்.

அதில் கழுத்து, நெற்றி, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவர்கள், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், கிரிஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும், சுசில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதனால், அவர்களது 7 வயது மகனும், 4 வயது மகனும் என இரு குழந்தைகள் தாய், தந்தையை இழந்து நிர்க்கதியாக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானத்தூர் போலீசார், கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற பார்த்தசாரதியை கைது செய்தனர்.

அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி

வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN