Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை செல்வதற்காக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இன்று மதுரை விமான நிலையம் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
டிஎன்டி (பிரமலைக்கள்ளர் சமூகம் ) கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கடிதம் அளிக்க உள்ளேன். சுதந்திரப் போராட்ட களத்தில் போராடி பல்வேறு உரிமைகளை இழந்த இச்சமூக மக்களுக்காக சலுகை வழங்கக் கோரி மனு அளிப்பேன்.
காங்கிரஸ் இன்றி திமுக அரசு அமைக்க முடியாது என தவெக நிர்வாகி நிர்மல்குமார் கூறியிருப்பது அவரது கருத்து.
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை குறித்து தலைமைக்கு தெரியும். ஏற்கெனவே கடந்த 17-ம் தேதி கட்சியின் தலைமையிடம் பேசிவிட்டுதான் வந்தேன். செல்வப்பெருந்தகைக்கும், எனக்குமான பிரச்சினை என்பது அண்ணனுக்கும் தம்பிக்குமானது. இதில் பெரியதாக ஒன்றுமில்லை. அவர் என் மீது புகார் அளிக்க டெல்லிக்குப் போவதாக வெளியாகும் தகவலில் ஒன்றுமில்லை. நீங்கள் (பத்திரிகையாளர்கள்) பெரிதாக்க வேண்டாம்.
ஆட்சியில் பங்கு என்பதில் ராகுல் காந்தி கருத்து என்ன என்பதை நீங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். மாணிக்கம் தாகூர் ராஜினாமா போன்ற வதந்திகளை அல்லர, சில்லர ஐடி விங் செய்கின்றன.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினரை தவறாக பார்க்கும் சங்கிகளின் பார்வை தொடர்கிறது. மாநிலத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் எப்படி பெண்களை பற்றி அவதூறாக பேசி, அதற்காக வருத்தப்பட்டிருக்கிறார். மாவட்டத் தலைவர்களுக்கும் அந்த வியாதி ஒட்டியுள்ளது. அவர்களின் வியாதியை தீர்க்க வேண்டியது முக்கிய கடமை. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து காங்கிரஸ் கட்சியில் உயர்ந்து, தற்போது ஜோதிமணி எம்.பி.யாக உள்ளார். அவரைப் பற்றி தவறான பேசிய பாஜக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி இதில் தலையிடவேண்டும். பெண்களை அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசுவது பாஜக நிர்வாகிகளுக்கு கை வந்த கலையாகிபோனது. இது பாஜக, ஆர்எஸ்எஸ் கலாச்சாரமாக மாறிவிட்டது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி வருங்காலத்தில் வளர்ச்சிக்காக இருக்க போகிறதா அல்லது வெற்றிக்காக இருக்கப் போகிறதா... தமிழகத்தின் நன்மைக்காக போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் தமிழக முதல்வர் கூறியது போன்று, தமிழ்நாடு - டெல்லிக்கு இடையேதான் போட்டி என போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் நம்பிக்கை உள்ளது.
இந்தத் தேர்தலில் தமிழகம் வெற்றி பெறும்.
என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b