விவசாயிகளின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளிவராதது ஏமாற்றம் அளிக்கிறது - இந்திய விவசாயிகள் சங்கம்
புதுக்கோட்டை, 17 பிப்ரவரி (ஹி.ச.) இன்று சட்டசபையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புதுக்கோட்டை ஜி.எஸ்தனபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசு தேர்தல
Farmers


புதுக்கோட்டை, 17 பிப்ரவரி (ஹி.ச.)

இன்று சட்டசபையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புதுக்கோட்டை ஜி.எஸ்தனபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக அரசு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சரும், வேளாண்மைத்துறை அமைச்சரும் தனித்தனியே தாக்கல் செய்திருக்கிறார்கள்.

வேளாண்துறை அமைச்சர் கடந்த பட்ஜெட்டின் மறுவாசிப்பாக வாசித்திருக்கிறார். ஐந்தாண்டு கால தொகுப்பை இருவரும் புதிய இடைக்கால பட்ஜெட் என்கிற பெயரில் தாக்கல் செய்துள்ளனர்.

ஐந்தாண்டு ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுடைய மறு வாசிப்பாக பட்ஜெட் வெளிவந்திருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி உபரி நீர்த் திட்டமான காவிரி - வைகை - குண்டாறு திட்டத்திற்கு எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை.

கடந்த தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான எந்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை. குறிப்பாக கூட்டுறவுக்கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, ஆயிரம் தடுப்பணைகள் கட்டுகிற பணி, அணைகள் தூர்வாருகிற பணிகள் உள்ளிட்ட தொலைநோக்குத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படவில்லை.

விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வதற்கு திமுக 2021 தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் கொடுத்தது.

ஆனால் இதுவரையிலும் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

25 சதம் மட்டுமே வேளாண்மையில் ஈடுபடுவதாகவும் அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது எனவும் கூறி இருக்கிறார். வளர்ந்த நாடுகளில் 3, 4 சதவீத அடிப்படையில் தான் விவசாயத்தில் ஈடுபடுவதாகவும் அவரது கருத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயத்தால் வேலை வாய்ப்புகள் கிடையாது.எனவே விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவது தான் நன்மை பயக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

தொழில் புரட்சி என்கிற பெயரில் விளைநிலங்களை அபகரிக்க உள்நோக்கம் கொண்ட கார்ப்பரேட் கொள்கைகளை திமுக அரசு கையாள்வதையே அவரது அறிக்கைகளும் தெளிவுபடுத்தி உள்ளது.

விவசாயிகள் தன் உழைப்பால் உற்பத்திப் பெருக்கம் அடைகிறது. பாதிப்புகள் இருந்தும் விவசாயிகள் தங்களை தற்காத்துக் கொள்கிறார்கள்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் காப்பீடு செய்கிற விவசாயிகளுக்கு இழப்பீடு கூட பெற்றுத்தருவதில்லை.மாறாக காப்பீடு நிறுவனங்களை அரசியல்வாதிகள் தனதாக்கி கொண்டதாக வெளிவந்திருக்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

பேரிடர் மேலாண்மை நிதியும் கூட அறிவிப்போடு நின்று விடுகிறது. இதுவரையிலும் பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் கிடைத்த பாடில்லை.

ஜெயரஞ்சனின் கூற்று உண்மையாக இருக்குமேயானால் கிராமங்கள் தோறும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

மாறாக உண்மைக்குப் புறம்பாக விவசாயத்திற்கு எதிரான கருத்துக்களை திட்டக் குழுத் துணைத் தலைவர் மூலம் பேச வைப்பது தேர்தல் களத்தில் வெளிப்படையாக விவாதங்களுக்கு முன் வைக்கப்படும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயரஞ்சன் தனது அறிக்கைக்கு பகிரங்கமாக விவசாயிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN