அச்சமில்லை… அச்சமில்லை - மாணிக்கம் தாகூர் எம்.பி
சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏ
அச்சமில்லை… அச்சமில்லை - மாணிக்கம் தாகூர் எம்.பி


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (15.02.2026) நடைபெற்றது. இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், ஆட்சியில் பங்கு தர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சியில் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்” எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானம் வாசிக்கப்படும் போது மாணிக்கம் தாகூர் செயற்குழு கூட்டத்தில் இல்லை.

இந்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பின்னரே மாணிக்கம் தாகூர் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை மறைமுகமாக சீண்டி வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்றும் காங்கிரஸில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவை விட யாரேனும் பெரியவர்களா? என்று சொல்லி மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்தார்.

இந்நிலையில் நேற்று

(பிப்ரவரி 16) டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் மீது மாநில தலைவரான நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு,

அது குறித்துப் பேசத் தான் அழைத்து இருக்கிறார்கள். பேசப் போகிறோம். ஆலோசனை செய்வோம். ஜனநாயகத்துக்கு முரணாக அகில இந்தியக் காங்கிரஸ் வழிகாட்டுதலுக்கு முரணாக யார் நடந்தாலும் தவறு தவறுதான் எனத் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் இன்று (பிப்ரவரி 17) காலை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பாரதியாரின் ‘அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்பதில்லையே…’ என்பதை சுட்டும் படம் ஒன்றை மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக உள்ள மாணிக்கம் தாகூர் பகிர்ந்துள்ளார். அது உட்கட்சி அளவில் தன்மீதான விமர்சனத்துக்கு அவர் கொடுத்துள்ள பதிலாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b