Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச)
2026-2027ம் நிதியாண்டுக்கான வேளாண் இடைக்கால பட்ஜெட்டை, தமிழக சட்டசபையில் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
அதன் விபரம் பின்வருமாறு:
இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்க ரூ.4.5 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், ரூ.178 கோடியில் 21,35,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 4,150 சோலார் பம்புசெட்டுகள் நிறுவப்பட்டுள்ளது.
மக்காச்சோளம் உற்பத்தி ஏக்கர் 10 லட்சத்திலிருந்து 12 லட்சமாக அதிகரித்துள்ளது.
ரூ.78 கோடியில் மக்காச்சோள உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தால், 1.50 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
14 லட்சம் ஏக்கரில் ரூ.229 கோடியில் எண்ணெய்வித்துப் பயிர்களின் சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், 7.54 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு 2 லட்சம் புதிய மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளில் 77,499 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. 1,320 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவப்பட்டன. நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் 2021-22ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து வேளாண்மை பட்ஜெட்டில் ரூ.1,94,076 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
முக்கனிகள் சாகுபடி பரப்பு விரிவாக்கம் மூலம் 39,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு, மல்லி உற்பத்தியில் முதலிடத்திலும், கொய்யா உற்பத்தியில் 2வது இடத்திலும் உள்ளது. விவசாயிகளிடம் 5 ஆண்டுகளில் 186 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடைய கருணாநிதி வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கப்பட்டு உள்ளது 17,340 ஆதி திராவிடர் பழங்குடியினர் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
நுண்ணீர்ப்பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்பட்டு உள்ளது. 5,13,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
பசுமைக்குடில், நிழல்வலைக் குடில் சாகுபடி ரூ.9 கோடியில் 23,55,000 சதுர மீட்டரில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. சுவைதாளிதப் பயிர்களான மிளகாய், மஞ்சள், மிளகு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றின் சாகுபடி பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டதால் 29,855 விவசாயிகள் பயன் அடைந்துள்ளன.
சென்னை, கோவையில் 4 புதிய உணவு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கணவரை இழந்த பெண்கள் வருவாய் ஈட்ட வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வளர்க்க 100% மானியம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கப்பட்ட 41 விளை பொருட்களில் சோழவந்தான் வெற்றிலை, பண்ரூட்டி பலா, முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரை ஆகிய 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தக்காளி, வெண்டை, கத்திரியை 1 லட்சம் ஹெக்டேரில் விரிவாக்கம் செய்ய 168 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டில் இயற்கை பேரிடர்களுக்கு ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
வேளாண் கல்வி, கல்லூரிகளுக்கு ரூ3,065 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நீர்வளத்துறை மூலம், அணைகளின் ஆயக்கட்டுப் பகுதிகளில் ரூ.498 கோடி செலவில் 4,580 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b