டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு அதிரடி பணி நீக்கம்
புதுடெல்லி, 17 பிப்ரவரி (ஹி.ச.) டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தில் முறைகேடு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஆட்சி மன்றக் குழு கலைக்கப்பட்டு, தற்காலிக நிர்வாகக் குழு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த டெல்லி
டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு அதிரடி பணி நீக்கம்


புதுடெல்லி, 17 பிப்ரவரி (ஹி.ச.)

டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தில் முறைகேடு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஆட்சி மன்றக் குழு கலைக்கப்பட்டு, தற்காலிக நிர்வாகக் குழு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த டெல்லி தமிழ்க் கல்விக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கு டெல்லி அரசு 95% உதவித்தொகை அளிக்கிறது.

இதன் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக டெல்லி அரசுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்து குவிந்தன. போலியான சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் விளைவாக, போலியான ஆவணங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட ஏழு ஆசிரியர்களை டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா கடந்த வருடம் அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.

ஊழல் தொடர்பாக மாநில கல்வி இயக்குனரகம் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய சி.பி.ஐ., டெல்லி கல்விக் கழகத்தின் செயலர் ராஜு உட்பட ஒன்பது பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, இந்த கல்வி நிறுவனத்தில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாகக் கூறி, இங்கு வேலை செய்யும் 104 ஆசிரியர்களுக்கு உதவித்தொகை வழங்குவதை டெல்லி அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்தச் சிக்கலான நிலையில், முறைகேடுகளுக்குக் காரணமான ஆட்சி மன்றக் குழுவை தூக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக கடந்த வருடம் ஜூலை மாதம் கல்வி கழக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சிறப்பு செயற்குழு கூடாததால், 200க்கும் மேற்பட்ட பெற்றோர் ஒன்று சேர்ந்து நேற்று முன்தினம் சிறப்பு பொதுக் கூட்டத்தை நடத்தினர்.

இதில் தலைவர் ஆர்.கே.ராமன், செயலர் ஆர்.ராஜு உள்ளிட்டோர் அடங்கிய ஆட்சி மன்றக் குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பள்ளிகளின் நிர்வாகத்தை கண்காணிக்க தற்காலிக குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, கண்ணையா தலைவராகவும், ஓய்வு பெற்ற மத்திய அரசு விஞ்ஞானி அருண் குமார் செயலராகவும், சத்யன், மணி, ரஜினிகாந்த் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிதாக தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தை தற்காலிக குழு கவனிக்கும்.

Hindusthan Samachar / JANAKI RAM