கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று முதல் தொடக்கம்
சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.) கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் என்பது இயேசு கிறிஸ்துவின் தியாகம், இறப்பிற்கு முன் அவர் அனுபவித்த துன்பங்கள், மீண்டும் அவர் உயிர்த்து எழுந்தது ஆகியவற்றை நினைவு கூர்ந்து, மரியாதை செய்யும் காலமாக கருதப்படுகிறது.
Christian-Lent-begins-today


சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் என்பது இயேசு கிறிஸ்துவின் தியாகம், இறப்பிற்கு முன் அவர் அனுபவித்த துன்பங்கள், மீண்டும் அவர் உயிர்த்து எழுந்தது ஆகியவற்றை நினைவு கூர்ந்து, மரியாதை செய்யும் காலமாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் என்பது இன்று (பிப்ரவரி 18ம் தேதி) சாம்பல் புதனுடன் துவங்கியுள்ளது. இதனை முன்னிட்டு, தேவாலயங்களில் இன்று சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

இந்த தவக்காலம் என்பது ஏப்ரல் 02ம் தேதியன்று பெரிய வியாழனுடன் நிறைவடையும். இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 03ம் தேதியன்று புனித வெள்ளியும், ஏப்ரல் 05ம் தேதியன்று இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.

ஒரு சிலர் சாம்பல் புதன் துவங்கி, பெரிய வியாழன் வரையிலான 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பார்கள். இன்னும் சிலர் ஈஸ்டர் வரை 46 நாட்கள் தவக்காலத்தை கடைபிடிப்பார்கள்.

இந்த 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மீன், இறைச்சி, முட்டை முதலான அசைவ உணவுகளை தவிர்த்து விடுவார்கள். அத்துடன், வீடுகளில், திருமணம், புதுமனை புகுவிழா என எந்த விதமான கொண்டாட்ட நிகழ்வுகளையும் நடத்த மாட்டார்கள்.

ஏசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வண்ணம் தவக்காலத்தின்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆலயத்தில் இருந்தும் இறைமக்கள் ஒரு குழுவாக சேர்ந்து முக்கியமான ஆலயங்களுக்கு திருப்பயணம் மேற்கொள்வார்கள்.

Hindusthan Samachar / vidya.b