Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 பிப்ரவரி (ஹி.ச.)
இந்தியாவில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், நிறுவனர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள், மாணவர்களும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த புத்தாக்க ஏஐ மாநாட்டில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அனைவரின் முன்னிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டன.
சில கண்டுபிடிப்புகள் வரவேற்பையும் பெற்றுள்ளன.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் மதிப்பிலான சீனாவில் தயாரிக்கப்பட்ட யுனிட்ரீ கோ2 என்ற ரோபோ நாயை தாங்கள் தயாரித்ததாகக் கூறி ஏஐ மாநாட்டில் காட்சிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கடும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
இந்த விடியோ இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்ட நிலையில், சீனாவைச் சேர்ந்தவர்கள் பலரும் அந்த ரோபோ நாய் சீனாவில் தயாரிக்கப்பட்டது என கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
மோடி அரசாங்கம், செயற்கை நுண்ணறிவு (AI) விஷயத்தில் உலகளவில் இந்தியாவை கேலி செய்யும் ஒரு விஷயமாக மாற்றியுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) உச்சிமாநாட்டில், சீன ரோபோக்கள் நம்முடையது போலக் காட்டப்படுகின்றன. சீன ஊடகங்கள் நம்மை கேலி செய்துள்ளன. இது இந்தியாவிற்கு உண்மையிலேயே சங்கடமாக இருக்கிறது.
மோடியின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய உச்சிமாநாட்டில் சீனாவின் ரோபோக்களை விளம்பரப்படுத்தி, அதே பொய்யில் ஈடுபடுவது இன்னும் வெட்கக்கேடானது.
மோடி அரசாங்கம் நாட்டின் பிம்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது - அவர்கள் செயற்கை நுண்ணறிவை (AI) ஒரு நகைச்சுவையாகக் குறைத்துள்ளனர்.
என்று பதிவிட்டுள்ளது.
இதனை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கூறுகையில்,
இந்தியாவின் திறமை மற்றும் தரவுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, AI உச்சிமாநாடு ஒரு ஒழுங்கற்ற மக்கள் தொடர்பு காட்சியாகும் - இந்திய தரவு விற்பனைக்கு, சீன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b