Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)
திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை
(பிப்ரவரி 22) கோவை, கருமத்தம்பட்டி, கணியூர் டோல்கேட் அருகில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் - துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தலைமைக் கழக அனுமதியுடன் கழக இளைஞர் அணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிளை – வார்டு – பாகங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 28 மாவட்டங்கள் – 91 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 1,50,000 நிர்வாகிகளை திருவண்ணாமலையிலும் – தென் மண்டலத்துக்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் – 58 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த 1,00,000 நிர்வாகிகளை விருதுநகரிலும் சந்தித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து திமுக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில்; துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி வரவேற்புரையாற்றிட வருகிற 22.2.2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணி அளவில், கோவை, கருமத்தம்பட்டி, கணியூர் டோல்கேட் அருகில் ’மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.
வரலாறு படைக்கப் போகும் இந்த “திமுக இளைஞர் அணி மேற்குமண்டல நிர்வாகிகள் சந்திப்பில்,” மேற்குமண்டலத்தைச் சேர்ந்த மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து வரலாறு படைத்திட, அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இளைஞர் அணி நிர்வாகிகளை “மேற்குமண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கு” அழைத்து வரும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டுமென திமுக அழைப்பு விடுத்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b