Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 18 பிப்ரவரி (ஹி.ச.)
திருப்பூர் அருகே கணக்கம்பாளையம் அரசு பள்ளி மாணவன் தீபக் (13) உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
13 வயதான தீபக் திடீரென உயிரிழந்த நிலையில், பள்ளி ஆசிரியர் தனது மகனை அடித்து கொலை செய்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, உண்மை வெளிவரும் வரை மகனின் உடலை பெறமாட்டோம் எனக் கூறி, இரண்டாவது நாளாகவும் அவர்கள் காத்திருப்பில் இருந்தனர்.
பள்ளி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து, உரிய மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி உண்மை தெரிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்துச் சென்று, தீபக்கின் சக மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், மாணவனின் உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மாணவனுக்கு செரிமானக் கோளாறு இருந்ததாகவும், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் குடலில் இருந்ததாகவும், மலச்சிக்கல் பாதிப்பு காணப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், பெற்றோர் தரப்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு முழுமையான பதில் கிடைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால், இறுதி மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகள் வெளியாகிய பின்பே மரணத்தின் உண்மை காரணம் தெளிவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் திருப்பூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN