குரூப் டி ரயில்வே தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.) ரயில்வே தேர்வு வாரியத்தால் ‘‘குரூப் டி” பணியில் 22195 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு வருகிற 2ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி
free training courses for Group D Railway Exam


சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)

ரயில்வே தேர்வு வாரியத்தால் ‘‘குரூப் டி” பணியில் 22195 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு வருகிற 2ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பின்படி, கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு, ஐடிஐ, இணையான கல்வித் தகுதி. வயது வரம்பு 18-33 ஆகும். இடஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு தளர்த்தப்படும். வயது வரம்பு, தேர்வு நடைமுறை, பாடத்திட்டம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 19ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விவரங்களை (https://forms.gle/sRVKQJ2QUFj6rxLn7) கூகுள் படிவத்தில் நிரப்புமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.

மேலும் ஆர்ஆர்பி, டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், எஸ்எஸ்சி உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் தன்னார்வபயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன. மாணவர்கள் சுயமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் ஸ்டடி ஹால் வசதியும் உள்ளது.

பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென் பாடகுறிப்புகள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலைநாட்களில் அணுகலாம்.

மேலும், விவரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b