Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 23 பிப்ரவரி (ஹி.ச.)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மத்திய அரசின் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் இன்று பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், தூத்துக்குடி துறைமுகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெரிடேஜ் மியூசியத்தை திறந்து வைத்த அவர், பள்ளி மாணவிகளுடன் அருங்காட்சியத்தை பார்வையிட்டார்.
வ.உ.சி கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய துறைமுக மெய்நிகர் மாதிரி செயலி உள்ளிட்ட 9 திட்டங்கள், ரூ.12 கோடி மதிப்பிலான 'கொற்கை' சுற்றுலாத் திட்டம், துறைமுக ரயில் சரக்குத் தள இணைப்புச் சாலை மேம்பாடு உள்ளிட்ட 21 புதிய திட்டங்களை தொடங்கி வைத்து துறைமுகத்தின் சமுதாய வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு அமைப்புகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
தமிழகத்தில் நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் துறைமுக மேம்பாட்டிற்காக ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சாகர்மாலா மற்றும் அம்ரித் பாரத் திட்டங்களின் கீழ் துறைமுகங்களை ரயில்வேயுடன் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் மட்டும் தற்போது ரூ.12,600 கோடி செலவில் 111 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தை நாட்டின் முதல் பசுமைத் துறைமுகமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இத்துறைமுகம் ஹைட்ரஜன் எரிசக்தி முனையமாக மேம்படுத்தப்பட உள்ளது.
தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைய உள்ளது. ரூ.15,000 கோடி மதிப்பிலான வெளித்துறைமுக வளர்ச்சித் திட்டத்தின் மூலம், துறைமுகத்தின் ஆழம் 18 மீட்டராக அதிகரிக்கப்படும். இதனால் பெரிய கப்பல்கள் வந்து செல்ல வழிவகை ஏற்படும்.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால், 2030-ஆம் ஆண்டிற்கான கடல்சார் வணிகத் திட்டம் மற்றும் 2047-ஆம் ஆண்டிற்கான மேம்பாட்டுத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் வரும் 2030-ஆம் ஆண்டு இந்திய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் 10,000 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். மேலும், 2070-ஆம் ஆண்டிற்குள் இந்தியா 'கார்பன் உமிழ்வற்ற'
(Zero Carbon emission) நாடாக உருவெடுக்கும்.
என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன், வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித், துறைமுகச் செயலர் மோகன் குமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b