நண்பனை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கிருஷ்ணகிரி, 24 பிப்ரவரி (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த கண்டகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (34). இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரும், மாரச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்கு
Krishnagiri


கிருஷ்ணகிரி, 24 பிப்ரவரி (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த கண்டகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (34). இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.

இவரும், மாரச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்குமார் (38) என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், லட்சுமிநாராயணனிடம் மகேஷ்குமார் ரூ.30 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது.

ஆனால், கூறிய தேதிக்கு மகேஷ்குமாரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இதனால் லட்சுமி நாராயணன் தனது பணத்தை அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்திற்கு அருகே லட்சுமி நாராயணனை காரில் கடத்தி சென்ற ஒரு கும்பல், அவரை சம்பத் நகர் அருகே வெட்டி கொலை செய்தது.

இது தொடர்பாக, தேன்கனிக்கோட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து லட்சுமி நாராயணனின் நண்பரான ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த மகேஷ்குமார் உட்பட 7 பேரை தேன்கனிக்கோட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கானது, ஓசூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்று கொண்டிருந்த போதே ஒருவர் இறந்து விட்டார்.

இதனிடையே, இந்த வழக்கில் வாத, பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், கொலை குற்றம்சாட்டப்பட்ட மகேஷ்குமார், ராஜ்குமார், வெங்கடாசலபதி, ஹரீஷ், சுரேஷ், சுரேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

மேலும், அவர்கள் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும் நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

மேலும், அனைவருக்கும் தலா ரூ. 30,000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN