Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 24 பிப்ரவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சுங்கச்சாவடி பகுதியில் மேலூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் அங்கு நின்று கொண்டிருந்த மூவரை போலீசார் விசாரணைக்காக அழைத்தனர்.
விசாரணையில் செம்பூர் பகுதியை சேர்ந்த உதயகுமார் (21), இலங்கிபட்டி பகுதியை சேர்ந்த விக்ரம் (21), புதுதாமரைப்பட்டியை சேர்ந்த சரவணன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.
மேலும் இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்பதற்கான கோணங்களில் மேலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN