ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மார்ச் 3-ஆம் தேதி மாசி மக தீர்த்தவாரி
கடலூர், 24 பிப்ரவரி (ஹி.ச.) ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பிரசித்திபெற்ற பூவராகசுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் 23 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக கிள்ளை கடற்கரை தீர்த்தவாரி அன்று சந்திர கிரகணம் வருவதால் தீர்த்தவாரி உற்சவம் நடத்துவதில் சிக்கல
Sri Mushnam Poovaragasamy Temple


கடலூர், 24 பிப்ரவரி (ஹி.ச.)

ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பிரசித்திபெற்ற பூவராகசுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் 23 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக கிள்ளை கடற்கரை தீர்த்தவாரி அன்று சந்திர கிரகணம் வருவதால் தீர்த்தவாரி உற்சவம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, அர்ச்சகர்கள், அதிகாரிகள், உபயதாரர்கள் ஆலோசனைபடி சந்திர கிரகணம் வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தீர்த்தவாரி உற்சவம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டு மாசி மக உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை

(பிப்ரவரி 25ம் தேதி) இரவு தங்க கருட சேவை, 26ம் தேதி சேஷ வாகனம், 27ம் தேதி அனுமந்த வாகனம், 28ம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா நடைபெறவுள்ளது.

மார்ச் மாதம் 1ம் தேதி ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கிள்ளை கடல் தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2ம் தேதி சேத்தியாதோப்பு தீப்பாய்ந்த நாச்சியார் கோவிலில் உற்சவமும், 3ம் தேதி காலை 6.30 மணிக்கு கிள்ளை கடற்கரை யில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 8ம் தேதி புவனகிரியில் முத்துப்பல்லக்கில் வீதியுலா, 9ம் தேதி திருமஞ்சனம் நடைபெறவுள்ளது.

அதன்பின்னர் 10ம் தேதி குமாரகுடி, கானுார் வழியாக பாளையங்கோட்டை, ராமாபுரம் கிராமங்களில் உற்சவம் நடந்த பின் 15ம் தேதி இரவு ஸ்ரீமுஷ்ணம் சுவாமி திரும்புகிறார். ஏற்பாடுகளை தக்கார் பழனியம்மாள், செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

கிள்ளை கடற்கரையில் 3ம் தேதி நடக்கும் தீர்த்த வாரி அன்று சந்திர கிரகணம் வருவதால், அன்று மதியம் நடக்கும் கடற்கரை தீர்த்தவாரி உற்சவம், இந்தாண்டு காலை 6.30 மணிக்கே நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து பயன் பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b