சிறப்பாக பணிபுரிந்த 8 காவல் ஆளிநர்கள் மற்றும் குற்றவாளியை பிடிக்க உதவிய பொதுமக்களில் ஒருவரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்
சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த 8 காவல் ஆளிநர்கள் மற்றும் குற்றவாளியை பிடிக்க உதவிய பொதுமக்களில் ஒருவரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் 1. கைதி வழிக்காவலின்போது பெரம்பலூர் அருகே ந
Bsv


சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த 8 காவல் ஆளிநர்கள் மற்றும் குற்றவாளியை பிடிக்க உதவிய பொதுமக்களில் ஒருவரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

1. கைதி வழிக்காவலின்போது பெரம்பலூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி கைதியை கொல்ல முயன்ற எதிரிகளிடமிருந்து கைதியை காப்பாற்றிய ஆயுதப்படை காவல் ஆளிநர்கள்

சென்னை, புழல் மத்திய சிறையில் இருந்து வரும் மதுரையைச் சேர்ந்த சிறை கைதி காளிமுத்து (எ) வெள்ளைக்காளி என்பவரை புதுக்கோட்டை, மதுரை மற்றும் திருச்சி நீதிமன்றங்களில் ஆஜர் செய்வதற்காக, 20.01.2026 அன்று சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில், காவலர்கள் குணா (கா.49267), மருதுபாண்டி (கா.49386), அஜித்குமார் (கா.50692) மற்றும் காவல் வாகன ஓட்டுநர்/முதல்நிலைக் காவலர் வினேஷ்குமார் (கா.41262) ஆகியோர் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்புடன் காவல் வாகனத்தில் கைதி வெள்ளைக்காளியை வழிக்காவல் செய்து திண்டுக்கல் கிளைச் சிறையில் வைத்து அதன் பின்னர் 21.01.2026, 22.01.2026 மற்றும் 23.01.2026 ஆகிய 3 நாட்கள் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளுக்கு கைதியை ஆஜர்படுத்தி, 24.01.2026 அன்று காலை மீண்டும் சென்னை, புழல் மத்திய சிறைக்கு செல்வதற்காக கைதி வெள்ளைக்காளியை காவல் வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்னை செல்லும் வழியில் மதியம், பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் மதிய உணவு சாப்பிடுவதற்காக கைதி வெள்ளைக்காளியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

சிறிது நேரத்தில் 2 கார்களில் வந்த சுமார் 10 நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கையில் மிளகாய்தூள் கரைசல்களை காவல் குழுவினர் மீது வீசியும் அரிவாள்களுடன், வெள்ளைக்காளியை கொலை செய்ய முற்பட்டபோது, காவல் குழுவினர் தடுத்தபோது 2 காவலர்களுக்கு நாட்டு வெடிகுண்டு பட்டு காயம் ஏற்பட்டபோது, சுதாரித்துக் கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் எதிரிகளை களைந்து செல்ல சொல்லியும் கேட்காததால், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ஹோட்டலின் மேற்கூரையை நோக்கி சுட்டும் எதிரிகள் மீண்டும் தாக்கவந்தபோது, ராமச்சந்திரன் எதிரிகளை நோக்கி சுட்டபோது, எதிரிகள் பயந்து ஓடி தாங்கள் வந்த கார்களில் ஏறி தப்பிச் சென்றனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த காவல் ஓட்டுநர் வினேஷ்குமார் மற்றும் மருதுபாண்டியை சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும், கைதி வெள்ளைக்காளியை பாதுகாப்பாக பெரம்பலூர் ஆயுதப்படைக்கு அழைத்துச் சென்றும் பின்னர் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் காவல் குழுவினர் தக்க சமயத்தில் விரைந்து செயல்பட்டு, கைதியை காப்பாற்றினர்.

2. எழும்பூரில் நள்ளிரவு ஆட்டோ ஓட்டுநரிடம் சவாரி கேட்பது போல நடித்து அவரது செல்போனை திருடிச் சென்ற இருவரை ரேபிடோ ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் விரட்டி பிடித்த காவல் ஆளிநர்கள்.

சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜ், வ/37 என்பவர் 08.02.2026 அன்று அதிகாலை, எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள பெட்ரோல் பங்க்கில் கேஸ் நிரப்பிவிட்டு சவாரிக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த 2 நபர்கள் நாகராஜிடம் சவாரி கேட்பது போல நடித்து அவரது செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர். உடனே நாகராஜ் சத்தம் போடவே, சற்று தொலைவில் பணியில் இருந்த திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் செந்தில்குமார் (த.கா.26703), வேப்பேரி போக்குவரத்து காவலர் சத்யராஜ் (கா.61938) மற்றும் ரேபிடோ ஓட்டுநர் அப்துல் ரவுப் ஆகியோர் துரத்திச் சென்று எதிரிகள் தினேஷ்குமார் மற்றும் அஜய் ஆகியோரை செல்போனுடன் மடக்கிப்பிடித்து, F-2 எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

3. புது வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி வந்த நபரை மடக்கிப் பிடித்த காவலர்.

சென்னை, பெருநகர காவல், H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர் ஜெஸ்டின் திரவியம் (கா.49654) என்பவர் 22.02.2026 அன்று மதியம் செக்டார் பணியிலிருந்தபோது, தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி போலீசை பார்த்ததும் தப்ப முயன்ற 2 நபர்களை நிறுத்தி விசாரணை செய்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் சுமார் 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததும், ஒடிசா மாநிலத்தில் இருந்து மேற்படி கஞ்சாவை கடத்தி வந்து, சென்னையில் விற்க முயன்றதும் தெரியவந்ததின்பேரில், பிடிபட்ட கார்த்திக்கேயன் மற்றும் கார்த்திக் ஆகியோரை கஞ்சாவுடன், H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேற்கண்ட சம்பவங்களில் தக்க சமயத்தில் விரைந்து செயல்பட்டு, சிறப்பாக காவல் பணி செய்த 8 காவல் ஆளிநர்கள் மற்றும் ரேபிடோ வாகன ஓட்டுரை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் இன்று (24.02.2026) நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், இணை ஆணையாளர் (தலைமையிடம்) திரு.S.மகேஸ்வரன், இ.கா.ப., துணை ஆணையாளர்கள் திருமதி.G.சுப்புலட்சுமி, இ.கா.ப (நிர்வாகம்) திரு.D.N.ஹரிகிரண் பிரசாத், இ.கா.ப (நலன் மற்றும் எஸ்டேட்) ஆகியோர் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ