Enter your Email Address to subscribe to our newsletters

சஹாரன்பூர், 24 பிப்ரவரி (ஹி.ச.)
உத்திரபிரதேச மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக இரண்டு சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சஹாரன்பூர் உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குற்றவாளிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 10.73 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி, சுமார் 20 பீகா (தோராயமாக 12.5 முதல் 20 ஏக்கர்) நிலத்தை சுற்றி எழுந்த தகராறு காரணமாக யாசின் மற்றும் அவருடைய சகோதரர் தாசின் ஆகியோர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட 13 நபர்களையும் கைது செய்தனர்.
பின்னர், ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 13 நபர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததோடு, அபராதமும் விதித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM